**நம்மைப் போலத்தான் அவனும்...
**பழைய பாடல்களையே
தாலாட்டாய் அனுபவித்து கண்மூடி
உறங்க அவனுக்கும் பிடிக்கும்...
**சித்திரை மாதத்து
மழைத்துளியில் இருந்து எழும்
மண்வாசனையை அவனுக்கும் பிடிக்கும்...
**கடலையைக் கொறித்துக் கொண்டே
கடற்கரை மணலில் கால் புதைய புதைய
நடக்க அவனுக்கும் பிடிக்கும்...
**நம்மைப் போலத்தான் அவனும்...
**தனக்குப் பிடிக்கும் நடிகனின்
திரைப்படத்தை முதல்நாளே
முண்டியடித்துப் பார்க்க
அவனுக்கும் ஆர்வம் வரும்...
**தன் குடும்பத்து
சோகத்திலும் சந்தோஷத்திலும்
கலந்து கொள்ள அவனுக்கும் ஆசை பொங்கும்...
**இந்தியா ஒவ்வொரு முறை
விளையாட்டில் வெற்றி
கொள்ளும்போதெல்லாம்
எல்லோருடனும் கொடிபிடித்து
கொண்டாட அவனுக்கும் ஆசை துள்ளும்...
**நம்மைப் போலத்தான் அவனும்...
**வரப்போகும் மனைவியைப் பற்றியும்
பின்பு தான் வளர்க்கப் போகும்
குழந்தையைப் பற்றியும்
அவனுக்கும் கனவுகள் வரும்...
**அதிகாலை மார்கழிப் பனியில்
கம்பளிக்குள் உறக்கம் அவனுக்கும் சுகமாய் வரும்...
**சன்னலோர இருக்கையில் அமர்ந்து
பிரயாணம் செய்ய அவனுக்கும் ஆர்வம் இருக்கும்..
**நேற்றுவரையிலும்
நம்மைப் போலத்தான் அவனும்...
**அவன் நம்மின் நாளைய பாதுகாப்புக்காக
இன்று மரணத்தோடு எல்லையில்
போராடிக் கொண்டிருக்கிறான்...