Tuesday, 4 September 2018

ASIRIYAR...

செப்டம்பர் -5


மாதா...பிதா...குரு தெய்வமென்று
யாருக்கும் சொல்ல மனமில்லை!!!..
ஆசிரியர் பணிஅறப்பணியென்று
ஆசிரியர்கள் மட்டும்தான் சொல்கிறார்கள்!!!...
சம்பளம் வாங்கவதையே சலுகையென
குறைக்கச் சொல்லி கூவத்தூர்
குள்ளநரி ஓலமிடுகிறது....
உங்களுக்கு சிரமம் வேண்டாம்...
நாங்கள் மக்கள் பணி செய்கிறோம்...
நீங்கள் மாணவரை உருவாக்குங்கள்...
ஆசிரியர்களை குறை சொல்லவே
குறை குடங்கள் கூத்தாடுகின்றன...
உங்களுக்கு தெரியுமா?...
ஜெர்மனியில் நீதிபதியைவிட
ஆசிரியருக்கு ஊதியம் அதிகம்...
ஜப்பானில் ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்கு
எல்லா நாட்டையும்விட அதிகம்...
அப்துல்கலாமும் முதல் குடிமகனைவிட...
விரும்பியது ஆசிரியர் பணி...
நம் நாட்டில் கந்துவட்டிக்காரர்களிடம்தான்
நிறைய ஆசிரியர்கள் வட்டிபோக
மீதி சம்பளமே வாங்குகிறார்கள்...
வட்டிக்குவிடும் ஆசிரியரைவிட வட்டிக்கு வாங்கும்
ஆசிரியர்கள்தான் மிக அதிகம்...
முதலில் ஆசிரியர்க்கு போதிக்கும்
பணியை மட்டும் கொடுங்கள்...
ஆசிரியர்க்கு போதிப்பதைவிட
பொதிசுமக்கும்  வேலையே அதிகம்...
செருப்பு முதல் நாப்கின்வரை...
வகுப்பறை முதல் கழிவறை வரை...
எல்லாவற்றுக்கும் பொறுப்பு...
படிக்காத....பள்ளி  வராத
எதையும் கேட்காத... எல்லோரையுமே
தேர்ச்சி பெற வைக்கவேண்டும்...
இத்தனை விடுமுறையா?
கேள்விகள் சுலபம்...
ஆசிரியருக்குத்தான் அரசு ஊழியர்களில்
குறைந்த விடுப்பு...
மருத்துவ விடுப்பையே எடுக்காத
ஆயிரம் ஆயிரம் ஆசிரியர்கள் உண்டு...
காலை...மாலை... விடுமுறைகளில்
சிறப்பு வகுப்புகள் போதிக்கும்
பலரைக் காட்ட முடியும்...
வருமானத்துக்கு அதிகமாக சொத்து
சேர்த்தவரென்று வருமானவரி
சோதனையில் இதுவரை
எந்த ஆசிரியரும் சிக்கியதில்லை...
லஞ்சம்... ஊழல்...  ஆசிரியர் பணியில் இல்லை...
என் குழந்தைகள் என்று தன்
வருமானத்தில் கொஞ்சம்
கொடுக்கும் ஆசிரியர்கள் நிறையபேர்...
நீச்சல் தெரியாவிட்டாலும் தன்
உயிரையும் தந்து  தியாகம்
செய்த ஆசிரியை உண்டு...
குறை சொல்லும் அறிவிலிகளே!!!...
உங்கள் குழந்தைகளை
பள்ளிக்கு அனுப்பாதீர்கள்...
எந்த ஆசிரியரையும் சாராமல்
நான் மட்டுமே படித்து உயர்ந்தேன்...
சொல்ல வைத்துக்கொள்ளுங்கள்!!!...
வாழ்வில் பாதியை படித்துவிட்டுதான்
இந்த சேவைக்கு வந்திருக்கிறோம்!!!...
அரசியலில்...திரைப்படத்தில்...தொழில்துறையில்...
எல்லோரையும்விட ஆசிரியர் அதிகம்
சேர்த்துவிடுவதில்லை....
அதிகபட்சம் ஒரு சொந்தவீட்டோடு
அவரின் மொத்த வாழ்க்கை முடிந்துவிடுகிறது...
போற்றாமல் இருந்தாலாவது பரவாயில்லை...
பொறாமைப்படாமல் இருங்கள்...
எதிர்காலத்தில் கல்வி முழுதும் தனியார்மயமாகும்...
இருக்கும் கோவணத்தையும் உருவியபிறகு புரியும்...
அரசுப் பள்ளிகள் சாதித்த விடயம்...
கல்வி   தனியார்மயமாதலின் விபரீதம்...
பிராய்லர் கோழிகளை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம்...
முடிந்தால் கல்வித்தந்தைகளை விமர்சியுங்கள்....
கல்வி கட்டணத்தை இல்லாமல் செய்து 
இலவசமாய் தனியாரிலும் தர வையுங்கள்...
குரு...வாத்தியார்...
இப்போது வாத்தி ஆனதில்
மாணவர் கைகளில் கத்தி...
ஆசிரியர்க்கு இல்லை சக்தி...
உண்மை கசக்கும்...
மருத்துவம் படித்து சேவை செய்யப்போகிறேன்...
சொல்ல எல்லோரும் உண்டு...
யாரும் ஆசிரியர் படிப்பு முடித்து
சேவை செய்ய விரும்புவதில்லை...
இப்போதெல்லாம் எந்த மாணவனும்
ஆசிரியராக விரும்புவதில்லை...
அடுத்த தலைமுறையை நினைத்து 
அவர்களே பயப்படுகிறார்கள்...
எந்த ஆசிரியரும்கூட
தன் மக்களை
விவசாயியைப் போலவே...
ஆசிரியராக்கவும்  விரும்புவதில்லை...
இன்றைய உண்மை இதுதான்....
அர்ப்பணிப்பு கொண்டு இன்னும் 
எதையும் தாங்கும் இதயம் கொண்டு...
சோர்வடையாமல் மாற்றம் தந்து 
ஏற்றம் தரும் ஏணிகளுக்கு 
ஆசிரியர் தின வாழ்த்துகள்....


































No comments:

Post a Comment

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...