மகளிர் தினம்...
*குழந்தைகள் பலர் ஒன்றாய்
விளையடிக்கொண்டிருந்தார்கள்...
எட்டு வயது சிறுவன்
ஐந்து வயது சிறுமியிடம் சொன்னான்...
* நீ பாத்திரம் தேய்த்து
துணி துவைத்து சமையலை முடித்து
வீட்டை சுத்தம் செய்து வை...
நான் அலுவலகம் சென்றுவிட்டு
அந்திசாயும் நேரம் வருகிறேன்...
*மூன்று பெண் குழந்தைகள்
பெற்ற ஒருவர் தன் நண்பரிடம்
சொல்லிக் கொண்டிருந்தார்...
இப்போது என் மனைவி
மூன்று மாதம்...
நான்காவது கண்டிப்பாய்
ஆண் குழந்தைதான்.
*அது ஒரு படத்தின் துவக்க விழா...
அந்த சூப்பர் ஹீரோவுக்கு
அது ஆறாவது படம்...
அறிமுக நாயகியாய் அவள்...
மூன்று வருடங்களில் அவள்
தங்கையாய் மாறினாள்...
பத்தாம் வருடம் அவருக்கே
அவள் அம்மாவாய் மாறிவிட்டாள்...
அதுவரையில் அவளுக்கு
திருமணம்கூட நடந்திருக்கவில்லை...
*இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு
அந்த சூப்பர் ஹீரோவின்
அறிமுக நாயகியாய் மீண்டும் அவள் மகள்...
*அது தேர்தல் வருடம்...
ஆறுமுறை MLA -வாய்
இருந்தவருக்கு இந்த முறை சிக்கல்...
அவர் தொகுதி பெண்கள்
தொகுதியாய் மாறியது...
தீவிரமாய் ஆலோசித்தார்...
தன்னுடைய பெயரையே
எழுதத் தெரியாத தன் மனைவியை
தேர்தலில் நிறுத்தி
இந்த முறையும் வெற்றி பெற்றார்...
*பாராளுமன்றத்தில் முதல்
பெண் பிரதமர் தன் சாதனைப்
பட்டியலை வாசிக்கிறார்...
நாங்கள் தான் பெண்களுக்கு
அரசியலில் 33% இட ஒதுக்கீடு
கொண்டு வந்திருக்கிறோம்...
தேர்தலில் போட்டியிட முடியாத அவரின்
கணவர் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து
தனக்குள் சிரித்துக் கொள்கிறார்...
*அவளை ஐந்தாய் முறையாக பெண்
பார்க்க வருகிறார்கள்...
அரசாங்க வேலையாம்...
ஐம்பது பவுனும் அவளின்
சௌகரியத்திற்காக காரும்
கேட்கிறார்கள்...
மௌனமே சம்மதமாய்
நிச்சயம் நடக்கிறது...
*திருமண நாளில் கூடமெங்கும்
சீர் வரிசைப் பொருட்கள்
நிறைந்து கிடக்கின்றன...
அவள் மனம் மட்டும் வெறுமையாய்...
அடக்கமாய் அவள் நிற்க
கால் மேல் கால் வைத்து கணவன் உட்கார
திருமண கோலம் பதிவு செய்யப்படுகிறது...
*முதல் இரவில் அவன்
இன்று தேதி எட்டு...
இந்த மாத ஏழு நாள் சம்பளத்தை மட்டும்
உன் வீட்டில் கொடு என்கிறான்...
தாலியின் பாரம் தாங்காமல்
அவள் தலை குனிகிறாள்...
அன்றைக்கு தேதி மார்ச்-8...
*ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்...
சென்ற நூற்றாண்டே
பாரதி சொன்னான்...
எங்கிருந்தோ ஒரு பேச்சாளரின்
ஆவேசக்குரல் ஸ்பீக்கரில் தெறிக்கிறது...
*ஆமாம்...எந்த நூற்றாண்டில்
இங்கு பெண்ணும் ஆணும் சமம்...
super nanba...
ReplyDelete